திருப்பூர் மாவட்டத்துக்கு தனி வணிகவரி கோட்டம் : அமைச்சர் மூர்த்தியிடம் ஏஇபிசி வலியுறுத்தல்

திருப்பூருக்கு தனி வணிகவரி கோட்டம் அமைக்க வேண்டுமென்று வணிகவரித்துறை அமைச்சரிடம், ஏஇபிசி வலியுறுத்தி உள்ளது.

கோவையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், கோவை, ஈரோடு வணிகவரி கோட்டத்துக்கு உட்பட்ட வணிக வரி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினர் மற்றும் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகத்தின் அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 65,000 வணிகர்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அளவைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பல நிறுவனங்கள் அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்குச் சென்று, தங்களது மதிப்பீடுகளை செய்ய வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட காங்கயம் மற்றும் தாராபுரம் பகுதியை சார்ந்த சுமார் 8,000 வணிகர்கள் துறை சார்ந்த பணிகளுக்காக, கரூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. உடுமலையை சேர்ந்த சுமார் 6,000 வணிகர்களும், திருப்பூர் அருகே உள்ள அவிநாசியை சார்ந்த சுமார் 5,000 வணிகர்களும் துறைசார்ந்த பணிகளுக்காக பொள்ளாச்சிக்கும், கோவைக்கும் செல்லவேண்டியுள்ளது. இதனால், ஏராளமான தொழில் துறையினரும், பயனாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, விரைவில் திருப்பூருக்கு என்று தனி வணிகவரி கோட்டம் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE