பல்வேறு மாவட்டங்களில் கார் திருடியவர் கைது : திருப்பூர் போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

By செய்திப்பிரிவு

திருப்பூர், கோவை, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் கார்களை திருடிய நபரை, திருப்பூர் மாநகர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட சூசையாபுரம் பகுதியில் அரிசிக் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த டவேரா கார் கடந்த மாதம் 11-ம் தேதி திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) பி.ரவி கண்காணிப்பில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வி.கணேசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை கிழபஞ்சபட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (எ) குளித்தலை சுரேஷ் (39) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் திருப்பூர், கோவை, செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு மாநகர் மற்றும் மாவட்டங்களில், நான்கு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. செம்மரம், எரிசாராயம் கடத்தல் என 25 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவற்றை கடத்துவதற்கு ஏதுவாக டவேரா கார்களை கடத்துவதை, சுரேஷ் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் கார் திருட்டில் ஈடுபட்ட சுரேஷை கைது செய்த, தனிப்படை போலீஸாருக்கு, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா பாராட்டி வெகுமதி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்