சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி : சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் :

By செய்திப்பிரிவு

கோவை: கோவை நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோவைப்புதூர் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது. இதில் 100- க்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, பெடலர்ஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலருமான பி.கிருஷ்ணகுமார் கூறியதாவது: இப்போது சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டும்போது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சிறந்த முறையில் செயல்பட்டு நல்ல ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும். இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

கோவைப்புதூரில் தொடங்கிய சைக்கிள் பயணம், சுண்டக்காமுத்தூர், பேரூர், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நல்லூர் வயல், இக்கரை போளூவாம்பட்டி வழியாக சிறுவாணியை அடைந்து மீண்டும் அதே பாதையில் கோவைப்புதூரை வந்தடைந்தது. கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக டி-சர்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, என்றார்.

இந்த பயணத்தை கோவை பீரங்கி படை பிரிவு, தேசிய மாணவர் படையின் கர்னல் சந்திர சேகர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ராஜசேகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். விழாவில் ரோட்டரி மாவட்ட இயக்குநர் குமரேசன், உதவி ஆளுநர்கள் பாஸ்கரன் மற்றும் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பெடலர்ஸ் அமைப்பின் செயலாளர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE