ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் - உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை தயார்படுத்த நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்கள் இணையதள வசதியுடன் கல்வி கற்க அமைக்கப்பட்ட ‘உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்’ அனைத்தையும் தமிழகம் முழுவதும் தயார்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள் இணையதள வசதியுடன் கல்வி கற்கும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்’ (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கூடத்தில் உயர்நிலைப் பள்ளி எனில் இணையதள வசதியுடன் 10 கணினிகள், மேல்நிலைப் பள்ளி எனில் 20 கணினிகளும் மற்றும் புரொஜெக்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வகம் பல பள்ளிகளில் செயல்படாமல் உள்ளது. விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டால் அனைத்து ஆய்வகங்களும் செயல்படும் வகையில் தயார்படுத்த, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி அதற்கான பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 77 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 136 பள்ளிகளில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 19 பள்ளிகளில் பழுது காரணமாக ஆய்வுக்கூடம் செயல்படவில்லை. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, அப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பழுதை நீக்கித் தருவதாக உறுதி அளித்தார்.

இதுபற்றி முதன்மைக் கல்வி அலுவலர் கூறும்போது, ஓரிரு நாட்களில் மாவட்டத்தில் 136 பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் தயார்படுத்தப்படும்.

கல்வித் தொலைக்காட்சியை மாணவர்கள் காண்பதை ஆசிரியர்கள் கண்காணிக்கின்றனர். மாவட்டத்தில் இடைநிற்றல் இல்லாமல் அனைத்து மாணவர்களும் மேல்வகுப்புக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்