கீழக்கரையைச் சேர்ந்தவர் ஜெகன் மனைவி கனகதுர்கா, தனது 2 பெண் குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் மனு அளித்தார்.
இது குறித்து கனகதுர்கா கூறியதாவது:
கீழக்கரையில் மிட்டாய்க்கடை நடத்தி வரும் எனது கணவர் ஜெகன், அலவாய்க்கரைவாடியைச் சேர்ந்த மலைச்செல்வத்திடம் தொழிலுக்காக வட்டிக்குக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மலைச்செல்வத்திடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினார். ஊரடங்கால் கடையைத் திறக்க முடியாததால், வட்டியைச் செலுத்த முடியவில்லை. இதற்கு ரூ. 5 வட்டி வீதம் ரூ. 3 லட்சத்துக்கு ரூ. 5.16 லட்சம் வழங்க வேண்டும் என, இல்லையேல் வீட்டையும், கடையையும் கிரையத்துக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என மலைச்செல்வம் மிரட்டுகிறார்.
இதனால் விரக்தி அடைந்த எனது கணவர் ஜெகன் கடந்த 30-ம் தேதி
தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இதுகுறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் காரணமான மலைச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கீழக்கரை டிஎஸ்பிக்கு காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago