விவசாயிகளின் பெயரில் ரூ.48 கோடி வங்கிக் கடன் வாங்கிய திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனுவை அளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகியை கைது செய்ய வேண்டும். ஆலை சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 2016-17, 2017-18-ம் ஆண்டு வெட்டிய கரும்புக்குரிய தொகை ரூ.80 கோடி விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல, கரும்பு விவசாயிகளின் பெயரில் உள்ள நிலங்களுக்குரிய கிராம நிர்வாக அலுவலரின் சான்றை மட்டும் வைத்து, 218 விவசாயிகளின் பெயரில் கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.48 கோடி கடன் வாங்கிய ஆலை நிர்வாகி கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், வங்கி சார்பில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக வங்கிக் கடன் பெற முடியாமல், விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
எனவே, ஆலை நிர்வாகியை கைது செய்து, வங்கிக் கடன் தொகையை மீட்க வேண்டும். திருமண்டங்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்குரிய இடங்களை அரசே கைப்பற்றி விவசாயிகளுக்குரிய தொகையைத் தர வேண்டும். வங்கிக் கடன்களையும் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago