மணல் குவாரி திறக்கக் கோரி - தஞ்சாவூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மணல் குவாரி திறக்கக் கோரி தஞ்சாவூரில் நேற்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி, சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களை பாதுகாக்க பட்டுக்கோட்டை வட்டம் சின்ன ஆவுடையர்கோவில் அக்கினி ஆறு, கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி, பூதலூர் வட்டம் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் இயங்கிவந்த மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும்.

திருவிடைமருதூர் வட்டம் முள்ளங்குடி, பாபநாசம் வட்டம் நடுப்படுகை, பேராவூரணி வட்டம் பெத்தனாட்சிவயல் ஆகிய தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாட்டுவண்டியில் மட்டும் மணல் எடுக்க புதிய மணல் குவாரியை திறக்க வேண்டும்.

பாபநாசம் வட்டம் புத்தூர், வீரமாங்குடி ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் மணல் எடுக்கும் வகையில் குவாரி அமைக்கப்படுவதை கைவிட வேண்டும். அந்த இடத்தில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

லாரி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் மாட்டுவண்டி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்