விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்காத ‘பவர் கிரிட்’ நிறுவனத்தை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ‘குடியேறும் போராட்டம்’ நேற்று நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். சட்டப் பூர்வமான இழப்பீடு வழங்காமல் பட்டா நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பவர்கிரிட் நிறுவனத்துக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், சந்தை மதிப்பில் இருந்து 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், பொதுப் பணித் துறை மற்றும் ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் பரிந்துரைப்படி 14 மீட்டர் ஆழ கிணற்றுக்கு ரூ.12.74 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து வகை மரங்களுக்கும் 25 வருட முதிர்வுத் தொகை வழங்க வேண்டும்” என முழக்கமிட்டனர்.
பின்னர், மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் கூறும்போது, “உயர் மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரங்களில் கேபிள் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் நிலங்களில் கான்கிரீட் அமைத்து அமைக்கப்படும் உயர்மின் கோபுரத்துக்கு பவர் கிரிட் நிறுவனம் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டு கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும். கிணறு, போர்வெல், அனைத்து வகையான மரங்களுக்கும் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் தொடரும்” என எச்சரித்தார்.
இதையடுத்து, தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டக் குழுவினர் கூறும் போது, “பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், குறிப்பாக கிணற்றுக்கான இழப்பீட்டு தொகையை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதால், சட்டபூர்வ மான இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆட்சியரும், பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அவர் பரிசீலித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என தெரி வித்தனர். இதனால், குடியேறும் போராட்டம் இரவும் நீடித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago