கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு : தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலமான கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலை யில், சில பள்ளிகளில் இணையதள வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் கல்விமுறை, பொது அறிவு, தற்போதைய மனநிலை மற்றும் கல்வி கற்பதற்கான புதிய சூழலை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கள ஆய்வு நடத்தி வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாத்தூர், பொய்யுண்டார்கோட்டை மற்றும் கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாத்தூரில் ஊராட்சித் தலைவர் மஞ்சுளா, தன்னார்வலர் ரஞ்சிதா ஆகியோர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வெ.சுகுமாரன், செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர், ஆய்வு நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஊக்கப் படுத்தினர்.

இதுகுறித்து வெ.சுகுமாரன் கூறியது: பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகள் உடனே திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் நடைபெற்ற ஆய்வில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், சிறு வயது திருமணங்கள் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கள ஆய்வு முடிவுகள் மாநில கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15-ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்