தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை உருவாக்க வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், சென்னையில் தமிழக ஜவுளித் துறை அமைச்சர் காந்தி, செயலாளர் அபூர்வா ஆகியோரை சந்தித்து அளித்த மனுவில், "பின்னலாடைத் தொழில் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி, குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். புதுமையான ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் வகையில், பின்னலாடை துறைக்கு பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திருப்பூரில் உருவாக்க வேண்டும்.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறையின் தேவைகளை பூர்த்தி செய்தால், வெளி மாநிலங்களை நோக்கி தொழில் செல்வதை தடுக்க முடியும். வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, தமிழகத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். எனவே, திருப்பூர் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் முருகானந்தம், ஜவுளித் துறை ஆணையர் பீலா ராஜேஷ் ஆகியோரை சந்தித்து அளித்த மனுவில், "தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை அரசு உருவாக்க வேண்டும். ஏ-டப் திட்டத்தில் கூடுதலாக சலுகைகள் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago