கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தாட்கோ கடனுதவி :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம்ஈட்டக்கூடியவர் உயிரிழந்திருப்பின் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தாட்கோ மூலமாக கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்புதிய திட்டத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயனாளிகள் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவராகவும், அவரது வயது 18 முதல் 60-க்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி, மேம்பாட்டுக் கழகம் வழங்கும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ. 1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில், 6 ஆண்டுகளுக்குள் கடனை திரும்பச் செலுத்தலாம்.

வருமானம் ஈட்டக்கூடியவர், கரோனா தொற்றால்தான் இறந்துள்ளார் என்பதற்கான ஆவணங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் வட்டாட்சியரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, ஆதார் அடையாள அட்டை, வருவாய் ஈட்டக்கூடிய உத்தேசிக்கப்பட்ட தொழில் அல்லது திட்டத்தின் பெயர், திட்டத்தொகை, விலைப் புள்ளியுடன் திட்ட அறிக்கை, கடன் கோரும் நபரின் பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் இரண்டு நகல்களுடன் மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, 3-வது பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், ஃபிங்கர்போஸ்ட், உதகை - 643 006 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0423-2443064 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்