தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.2.47 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது. தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்ற பணிகளை, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவருமான குணசேகரன் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்வுகளில் 2,879 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,310 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதுதவிர, வங்கி தொடர்பான 2 வழக்குகளிலும் மக்கள் நீதிமன்றம் தீர்வை ஏற்படுத்தியது. நேற்றைய மக்கள் நீதிமன்றம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 21 ஆயிரத்து 480-க்கு சமரசத் தீர்வுகள் காணப்பட்டது.
தீர்வு காணப்பட்ட வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, சமரச குற்ற வழக்கு போன்ற வழக்குகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
கிருஷ்ணகிரியில் 83 வழக்குகளில் தீர்வு
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி தலைமை வகித்தார்.மகளிர் நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.லதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம்.செல்வம், சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.வி.மணி, தலைமை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், சிறப்பு சார்பு நீதிபதி ராஜமகேஷ், சிறப்பு கூடுதல் சார்பு நீதிபதி குமாரவர்மன் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 அமர்வுகள் அமைக்கப் பட்டு 819 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 83 வழக்குகளில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 800-க்கு தீர்வு காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago