காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் முகத்தில் வெட்டுக் காயம் இருப்பதால் போலீஸார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர் அனிதா(45). இவர் ஓரிக்கை பகுதியில் உள்ள தனது அக்கா சண்முகக்கனி, மாமா வெள்ளைச் சாமி, இவர்களின் மகன் ராகுல் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். வெள்ளைச் சாமி இந்து சமய அறநிலையத் துறையில் கோயில் செயல் அலுவலராக உள்ளார். ராகுல் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். அனிதாவுக்கு வீட்டின் மாடியில் தனி அறை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனிதா தங்கி இருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் பேசிய அனிதா யாரோ அறையில் இருப்பதுபோல் உணர்வதாகவும், தனக்கு அச்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து (மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டிருந்தால்) அருகாமையில் உள்ள வீட்டு மாடியில் ஏறி அனிதா தங்கி இருந்த அறைக்கு வந்துள்ளனர். அந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அனிதா மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. அவசர ஊர்தி உதவியுடன்காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அனிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவர் அணிந்திருந்த 6 பவுன்நகைகள் திருடு போயிருப்பதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அவர் முகத்தில் காயங்கள் இருப்பதும் அவர் கொலை செய்யப்பட்டாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது, “உயிரிழந்த பேராசிரியரின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்படுகிறது. முகத்தில் உள்ள காயத்துக்கும், அவரது உயிரிழப்புக்கும் தொடர்பில்லை. உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வந்தால் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago