ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை அனுமதியின்றி எடுத்து வருவதாக, குடிமைப் பொருள் வழங்கல் தடுப்புப் பிரிவு காவல் துறை ஏடிஜிபி ஆபாஷ் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவள்ளூர் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார், திருவள்ளூர் மாவட்டத்தின் ஆந்திரா - தமிழக எல்லையான பொன்பாடி, எளாவூர், ஊத்துக்கோட்டை ஆகிய 3 சோதனைச் சாவடிகளில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 6 லாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றி நெல் மூட்டைகள் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, 91 டன் நெல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஒரு லாரியில் இருந்து 31 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு 4 லாரிகளில் கடத்த முயன்ற 54 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து குறைந்த விலைக்கு இந்த நெல் வாங்கப்பட்டு ஆந்திராவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago