பரோலில் வெளிவந்துள்ள பேரறி வாளனை நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரம் அழைத்து வந்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாள னுக்கு கடந்த 2017-ம் ஆண்டு 60 நாட்கள் பரோலும், 2019 ம் ஆண்டு பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை மற்றும் அவரது தங்கையின் மகள் திருமணத்துக்காக 30 நாட்கள் பரோலும் தமிழக அரசு வழங்கியது. மேலும், கடந்த ஆண்டு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பரோல் வழங்க அனுமதி கோரி இருந்த நிலையில், 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, பரோலில் வந்து வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க அற்புதம்மாள் அண்மையில் மனு அளித்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் 4-வது முறையாக பரோலில் வெளியே வந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், தொடர் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார்.
அதன்படி, மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தனது தாயார் அற்புதம்மாளுடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். மருத்துவர் தியாகராஜனிடம் அவர் உடல் பரிசோதனை செய்து கொண்டார். மேலும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
பேரறிவாளனின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக விழுப்புரம் - புதுச்சேரி சாலை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் 4-வது முறையாக பரோலில் வெளியே வந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago