கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழைக்கு தொழிலாளி உயிரிழந்தார். பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து 4,500 கனஅடிக்கு மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மலையோர பகுதி, மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கடும் வெயில் அடித்தது. ஆனால், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகலிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மரங்கள் சாய்ந்து மின்கம்பிகளில் விழுந்தன. இதனால் இரவுமுழுவதும் மின்தடை ஏற்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வில்லை.
அதிகபட்சமாக களியலில் 110 மிமீ மழை பெய்தது. குழித்துறையில் 104, பூதப்பாண்டியில் 47, சிற்றாறு ஒன்றில் 72, கன்னிமாரில் 74, கொட்டாரத்தில் 42, மயிலாடியில் 80,நாகர்கோவிலில் 68, பேச்சிப்பாறையில் 69, பெருஞ்சாணியில் 86, புத்தன்அணையில் 84, சிவலோகத்தில் (சிற்றாறு இரண்டு) 48, சுருளகோட்டில் 45, தக்கலையில் 43, குளச்சலில் 18, பாலமோரில் 62,மாம்பழத்துறையாறில் 72, கோழிப்போர்விளையில் 42, அடையாமடையில் 73, குருந்தன்கோட்டில் 60, முள்ளங்கினாவிளையில் 46, ஆனைகிடங்கில் 73 மற்றும் முக்கடல் அணையில் 55 மிமீ மழை பெய்தது.
பலத்த மழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.37 அடியாக உள்ளது. அணைக்கு 1,466 கனஅடி தண்ணீர் வருகிறது. 3,500 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. சிற்றாறு ஒன்று அணை நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1,082 கனஅடி வந்தது. 1,000 கனஅடி திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து 944 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 72.71 அடியாக உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை நீர்ஆதாரப் பிரிவு பொறியாளர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், அணைப்பகுதிகள் மற்றும் மலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழைநீருடன் கலந்து அணைநீரும் கரைபுரண்டு ஓடுவதால் 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது. இதனால் அருவி அபாயகரமாக காட்சியளிக்கிறது. அருவிப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழையால் குமரி மாவட்டத்தில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேதமான மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை மின்வாரியத்தினர் நேற்று சீரமைத்தனர்.
கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வேலையா (65) என்பவர் நேற்று காலை மாதவபுரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மழையால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வேலையா சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, வில்லுக்குறி பகுதிகளில் சூறைக்காற்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து சேத மடைந்தன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்.):
பாபநாசம்- 12, சேர்வலாறு- 1, கொடு முடியாறு- 15, அம்பாசமுத்திரம்- 2, களக்காடு- 2.2. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 116.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,287.35 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 76.55 அடியாக இருந்தது. அணைக்கு 46 கனஅடி தண்ணீர் வந்தது. 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 30 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 16, சிவகிரியில் 13, கருப்பாநதி அணையில் 9, குண்டாறு அணையில் 7, செங்கோட்டையில் 3, தென்காசியில் 2.60 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணையில் நீர்மட்டம் 68.70 அடியாகவும், ராமநதி அணையில் 59.25 அடியாகவும், கருப்பாநதி அணையில் 62.67 அடியாகவும், அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 115 அடியாகவும் இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago