கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை : இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

By செய்திப்பிரிவு

கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரி சோதனை மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு நேற்று தரிசனம் செய்தார். அப்போது,அவர் கோசாலை, தானிய கொட்டாரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஆய்வின்போது ஆட்சியர் சிவராசு, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். கோயிலின் கிழக்குவாசலில் ரூ.3.15 கோடி செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணி, ரூ.13.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்தர்களுக்கான வரிசை வளாகப் பணி ஆகியவற்றை பார்வையிட்டு, விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘மாரியம்மன் கோயிலின் உபகோயிலான கனகாம்பிகை உடனாய முக்தீஸ்வரர் கோயிலில் ரூ.17 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயிலில் குடமுழுக்குக்காக ரூ.58 லட்சம் செலவில் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன’’ என்றார்.

மன்னார்குடியில்...

பின்னர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோயில் யானை செங்கமலத்துக்கு பழம், கரும்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார். அப்போது, யானை செங்கமலத்துக்கு நீச்சல் குளம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோயில் யானைகளுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘கோயில் நிலங்களில் குழுவாக ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள், தங்களை வாடகைதாரர்களாக மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான் அவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

அப்போது, எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி.ராஜா, கோயில் செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், திருவாரூர் தியாகராஜகோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.

தொடர்ந்து, நாகை மாவட்டத்துக்குச் சென்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அஞ்சுவட்டத்தம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் அருண் தம்புராஜ், எம்எல்ஏ நாகை மாலி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்