விண்ணமங்கலம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் சேதம் - ஏரிக்கு நீர்வரத்தை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் நள்ளிரவில் சேமடைந்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கான நீர்வரத்தை உறுதி செய்ய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக-ஆந்திரஎல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.

பாலாற்றுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக நீர்வரத்து இருப்பதால் நேற்று ஆம்பூரை கடந்து வெள்ள நீர் சென்றது.

ஆம்பூர் அருகேயுள்ள விண்ண மங்கலம் ஏரி பாலாற்றை நீராதார மாக கொண்டுள்ளது. பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஏரிக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்தது.

ஏறக்குறைய பாதி அளவுக்கு ஏரி நிரம்பிய நிலையில் நீர்வரத்துக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பாலாற்றுக்கு தண்ணீர் சென்றது.

இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.வில்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சேதமடைந்த நீர்வரத்து கால்வாய் பகுதியை அதிகாரிகள் குழுவினருடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கான நீர்வரத்தை உறுதி செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் உடனி ருந்தார்.

நீரை சேமிக்க கோரிக்கை

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாலாற்றில் வெள்ளம் வருவது அதிசயமாக போய்விட்ட இந்நாளில் இந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்திலேயே தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளம் வந்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளின் மழைக்காலங்களாகும். இதனால், தொடர் மழையும் அதன் காரண மாக பாலாற்றில் வெள்ளம் வரும் வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக அரசு பாலாற் றில் அரிதாக வரும் வெள்ள நீரை விரயமாக்காமலும் நீரை சேமிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏரிகளின் மதகுகளை சீர்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும். வரத்துக்கால் வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். மேலும், ஏரிகளின் வரத்துக் கால்வாய்கள் ஆற்றில் தொடங்கும் முகத்துவார பகுதி களில் கட்டப்பட வேண்டும்.

ஆறு பள்ளமாகவும் ஏரிவரத்துக் கால்வாய்கள் உயரமாகவும் உள்ள தால் ஆற்று நீர் எளிதாக ஏரிக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்காக, பாலாற்றில் வாய்ப் புள்ள இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும்’’ என தெரிவித் துள்ளார்.

மழையளவு விவரம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவு வரை பல இடங்களில் பரவலான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, வேலூர் 55.2, காட்பாடி 76.8, குடியாத்தம் 49, பொன்னை 13.8, வேலூர் சர்க்கரை ஆலை பகுதி 74, வாணியம்பாடி14, ஆம்பூர் 12.6, ஆலங்காயம் 20.2, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதி 20, ஜோலார்பேட்டை 2, வாலாஜா 31, அரக்கோணம் 65.2, ஆற்காடு 15, சோளிங்கர் 23, காவேரிப்பாக்கம் 17, கலவை 46.2,அம்மூர் 48 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்