தமிழக பாஜக தலைவராக கு.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பாஜகவினர் நேற்று பட்டாசு வெடித்து, இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையில் வி.வி.செந்தில்நாதன், முன்னாள் நகரத் தலைவர் செல்வன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், அவ்வழியாக காரில் வந்த ஆட்சியர் த.பிரபுசங்கரும் சிக்கினார். இதையடுத்து, பாஜகவினரை கைது செய்யும்படி உத்தரவிட்டுவிட்டு, ஆட்சியர் சென்றார்.
தொடர்ந்து, அங்கு வந்த எஸ்.பி சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில், பாஜகவினர் சிலரை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, சிவசாமி மீது போலீஸார் கைவைத்து தள்ளியதால், பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஊரடங்கு நேரத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கே.சிவசாமி, வி.வி.செந்தில்நாதன், செல்வன் உட்பட 45 பேர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago