மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் - தொழில் தொடங்கி வென்றோரின் நிறுவனங்களில் ஆட்சியர் ஆய்வு :

கரூர் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் மூலம் பயனடைந்து, தொழில் முனைவோராகி, தற்போது சிறந்து விளங்கக்கூடிய நபர்களின் தொழில் நிறுவனங்களில் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

இதில், கரூர்- சேலம் புறவழிச்சாலையில் உள்ள கலர் ரூபிங் நிறுவனம், ஆத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை, செலோடேப் தயாரிக்கும் நிறுவனம், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனம் உள்ளிட்டவற்றையும், கொங்கு திருமண மண்டபம் எதிரில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையத்தையும் பார்வையிட்ட ஆட்சியர், அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற்றதன் மூலம் அடைந்துள்ள தொழில் வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறியது:

தொழில் முனைவோராகி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வெற்றிக்கான கதவுகளை திறந்துவிடும் வகையில் சிறப்பான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, இத்திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ள தொழில்முனைவோரின் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், இளைஞர்கள் சுயதொழில் செய்து, தொழில்போட்டியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட தொழில்மைய மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் கிரீசன், சிட்கோ கிளை மேலாளர்(பொ) ராஜாராம், மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE