கந்து வட்டி கொடுமையில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க கூட்டுறவு துறை மூலம் குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சகம் என 4 தலைமைச் சங்கங்களும், தொடக்க கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர கூட்டுறவுச் சங்கங்கள் என 116 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில், வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம் பட்டு, கே.வி.குப்பம் ஆகிய வட்டங்களில் தொடக்க கூட்டுறவு சங்கங்களாக 55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 8 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 2 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 3 கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் 31 பணியாளர்கள் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கூட்டுறவு துறைகள் மூலம் குறைந்த வட்டியில் திருப்பிசெலுத்தும் முறையில் கடன் தொகை வழங்கப்படுகிறது. அதாவது, பயிர்க்கடன், நகைக் கடன், விவசாய நகைக்கடன், கறவைமாடு கடன், கோவிட்-19 மகளிர் சுய உதவிக்குழு சிறப்புக்கடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் களுக்கான சம்பளக்கடன், தாட்கோ கடன், கல்விக்கடன் என மொத்தம் 20 வகையான கடன் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது, கரோனா தொற்று காலத்தில் வேலை இழந்து தவிக்கும் பட்டதாரி இளைஞர்கள், நலிவடைந்த கைவினை கலைஞர்களுக்கும், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள், சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
உரிய காலத்தில் கடன் களை திருப்பி செலுத்தும் பயிர்க்கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதர கடன்களுக்கு 7 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை வட்டியுடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே, பொதுமக்கள் கந்து வட்டியில் சிக்கி தவிக்காமல் கூட்டுறவு நிறுவனங்களை நேரில்அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கடன் உதவிகளை பெற்று பயன் பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago