திருப்பூரில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை, பொது பயன்பாடு குறித்த வழக்குகளுக்கு அணுகலாம் என, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும், மாவட்ட நீதிபதியை தலைவராகவும், 2 நபர்களை உ றுப்பினர்களாகவும் கொண்டு நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு பொது பயன்பாடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சமரசமாக தீர்வு எட்டப்படும். சமரசம் ஏற்படாதபட்சத்தில், சட்டத்துக்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பித்து தீர்வு காணப்படும். நீர்வழி, ஆகாயவழி, தரைவழி போக்குவரத்து பயணிகள் தொடர்புடைய பிரச்சினைகள், அஞ்சல் அல்லது தொலைபேசி சேவை தொடர்பான பிரச்சினைகள், குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, துப்புரவுத் தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள், மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை, காப்பீட்டு சேவைகள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சேவை குறைபாடு தொடர்பான மனுக்களை நிரந்தர மக்கள் நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்து, சமரச முறையில் தீர்வு காணலாம்.
பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை பொது பயன்பாட்டு சேவைகளுக்கான நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர்,மாவட்ட நீதிபதி முன்வழக்கமானநீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண மனுவாக நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்துக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவே இறுதியானது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago