தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வில் : தமிழக மாணவர்கள் சிறப்பிடம்

By எம்.நாகராஜன்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி ஆகியவை இணைந்து, தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகின்றன.

மாணவர்களிடையே அறிவியல்மனப்பான்மையை வளர்ப்பதோடு,அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் 3 கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பேரிடர் காரணமாக, வீட்டில் இருந்தபடியே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஆன்லைன் மூலம் முதல்கட்டத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டனர். சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உடுமலையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரும்,வித்யார்த்தி விஞ்ஞான் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கண்ணபிரான் கூறியதாவது:

முதல்கட்ட தேர்வில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் சிறப்பாக தேர்வு எழுதிய சுமார் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 120 மாணவர்களுக்கு 2-ம் கட்ட மாநில அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் முதல் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிகட்டத் தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தேர்வு கடந்த மாதம் இணைய வழியில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய அளவில் சென்னை பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த காந்த் நடராஜன் 8-ம் வகுப்பில் முதலிடமும், சென்னை நாராயணா இ-டெக்னோ பள்ளியைச் சேர்ந்த துர்கேஷ் 10-ம் வகுப்பில் 2-ம் இடமும், வேலூர் மாவட்டம்  சிருஷ்டி வித்யாஸ்ரமம் பள்ளியைசேர்ந்த ரிஅன்மேத்யூ 11-ம் வகுப்பில்3-ம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி அடிப்படையில் 3 இடங்களை பெற்றவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ. 2,000 ரொக்கப் பரிசுடன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்