காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை தாங்கினார். அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தின்போது பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாம்பரம் பெருநகர காங்கிரஸ் தலைவர் ஜே.பி.விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தார். தாம்பரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்புநடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
இதேபோல் மாவட்ட பொதுச் செயலாளர் கே.முர்த்தி தலைமையில் கீழ்கட்டளையில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரில் நகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், பொன்னேரி, பூந்தமல்லி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மாநில துணை தலைவர்களான சதாசிவலிங்கம், இமயா கக்கன், மாநில பொதுச் செயலாளர் அருள் அன்பரசு, திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்களான ஏ.ஜி.சிதம்பரம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
பூந்தமல்லி உள்ளிட்ட பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago