நீட் தேர்வால் குழப்ப நிலை அடைந்துள்ள மாணவர்களுக்கு நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மூலம் நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்க வேண்டும், என ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமீபத்திய சர்வதேச அளவிலான ஆய்வு முடிவு ஒன்று மாணவர்களின் தகுதித்திறன் பற்றிய ஒரு கருத்துரையை வழங்கியுள்ளது. அதன்படி ஒரு மாணவரின் முழு ஆளுமையை ஒருபோதும் போட்டித் தேர்வுகளினால் கணிக்க முடியாது. ஆனால், மாணவர் களுடைய முழுத்திறமையையும், ஆளுமையையும் அவர்களின் இறுதித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும் என அவ்வறிக்கை கூறுகிறது. மேலும், மாணவர் பெற்ற மதிப்பெண்கள் மொழிப்பாடங்கள் முதல் சமூக அறிவியல் பாடம் வரை எடுத்துள்ள மதிப்பெண், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு உள்ளிட்டவை மூலம் முழுமையாக கணிக்க முடியும்.
இன்று பலர் தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டும், சிலர் நீட் அவசியம் என்றும் பேசுகின்றனர். கரோனா தொற்று அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்ற தருணத்தில் நீட் தேர்வு அவசியமா என்ற கேள்வி நம் அனைவரின் மனங்களிலும் எழுகிறது. பள்ளிகளில் நடக்கும் பல முறைகேடுகளைத் தவிர்க்க விரும்பினால் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று தேர்வுகளில் ஒரு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உரிய விகிதத்தில் கணக்கிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு 70 சதவீதம், பிளஸ் 1 மதிப்பெண்களுக்கு 20 சதவீதம், 10-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 10 சதவீதம் வரிசை பட்டியல் வெளியிடலாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் வல்லுநர்கள் குழு ஒன்றினை அமைத்துள்ளது.
இந்தக்குழு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட, ஏற்பட போகிற சிக்கல்களையும், ஊறுகளையும் மிகச்சரியான புள்ளி விவரங்களோடு கணித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இது ஒரு மிகச்சரியான முன்னெடுப்பாகும். இந்தக்குழு வழங்க உள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியோ அல்லது நீதிமன்றங்களின் மூலமாகவோ நல்லதொரு தீர்ப் பினை மாணவர்சமுதாயம் பெற வழிவகுக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago