மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டி - நீலகிரி மாணவிகள் : 4 பேர் பங்கேற்க தேர்வு :

By செய்திப்பிரிவு

உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.

மகளிருக்கான 23 வயதுக்கு உட்பட்ட மினி உலககோப்பை கால்பந்து போட்டிகள் உக்ரைன் நாட்டில் ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்குகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்தியாவில் ஆசிய மினி கால்பந்து கூட்டமைப்பு தேர்வு செய்ததில், இந்தியாவில் இருந்து 15 பேர் அடங்கிய குழுவினர் இப்போட்டியில் பங்கேற்கத் தேர்வாகி உள்ளனர்.

இவர்களில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான செளமியா, ஜெய, ஹெப்சிபா கிரேஸ், சஞ்ஜனா ஆகிய நான்கு மாணவிகள், இப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். இவர்கள், உதகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுதொடர்பாக மகளிர் அணியின் பயிற்சியாளர் சிவா கூறும்போது, ‘‘இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து நீலகிரியைச் சேர்ந்த நான்கு மாணவிகள், மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் பங்கேற்க, அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்