போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் : காவல் கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கம் மனு

By செய்திப்பிரிவு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் கலையரசி, நிர்வாகிகள் ஜெயந்தி, தேவி உள்ளிட்டோர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருக்கழுக்குன்றம் வட்டம் வெங்கம்பாக்கம் கிராமத்தில் பாலியல் தொல்லை கொடுத்து, படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் கொலை வழக்கில் 17 வயது குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், சிறுமியின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளியின் உறவினர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும், அந்த கிராமத்தில் விசாரித்த வகையில், பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

சிறுமியை படுகொலை செய்த 17 வயது குற்றவாளியும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனவே, இந்தப் பிரச்சனையில் மாவட்ட காவல் துறை உடனடியாக தலையிட்டு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான 17 வயது குற்றவாளியை ஜாமீனில் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

மேலும், இளைஞர்கள், மாணவர்களை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்