காஞ்சியில் கர்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் கர்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று தொடங்கிவைத்தார்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறியதாவது: கரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் அதிகரித்ததுடன், குறைப் பிரசவம், கருச்சிதைவு, கருவிலேயே குழந்தை இறப்பது போன்ற சிக்கல்களும் ஏற்பட்டன. இதை தடுக்க கர்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவது அவசியம். கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகும், கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 84 நாட்களுக்கு பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பிரசவிக்கும் தருவாயில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட தாய்மார்கள், பிரசவித்த பின்னர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

எந்த சிக்கலும் இல்லாத கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்ற நோய் தாக்கம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தகுந்த பரிசோதனைக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்