தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்ட குழந்தையை விரைந்து மீட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல ஐஜி பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.
தமிழக காவல்துறையின் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று தருமபுரி வருகை தந்தார். தருமபுரி மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் தனிப்பிரிவு டிஎஸ்பி-க்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஐஜி சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மாதம் 20-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த மறுநாளே ஆண் குழந்தை திருடப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு 2 நாட்களில் குழந்தையை மீட்டு அருள்மணி-மாலினி தம்பதியிடம் ஒப்படைத் தனர். மேலும், குழந்தையை கடத்திய தஞ்சியா, ஜான்பாஷா, ரேஷ்மா, பேகர் பீர் ஆகிய 4 நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் விரைவாக செயல்பட்ட போலீஸாருக்கு ஐஜி சுதாகர் பாராட்டு தெரிவித்து வெகுமதிகளை வழங்கி கவுரவித்தார்.இந்நிகழ்ச்சியின்போது, சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
451 பேர் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 451 பேர் மீது சட்டரீதியாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரஅள்ளி யில் தொழில் போட்டி காரணமாக அபி என்பவரை கொலை செய்த வழக்கு, பார்த்த கோட்டா தென்பெண்ணை ஆற்றில் நீரில் மூழ்கி குருபரப்பள்ளி சிக்காரிமேட்டைச்சேர்ந்த முத்து (எ) அழகுமுத்து என்பவர் உயிரிழந்த வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த டிஎஸ்பி சங்கர் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 451 பேரைக் கண்டறிந்து, 110 பிரிவின் கீழ் சட்ட ரீதியாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஐஜி சுதாகர் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, கிருஷ்ணகிரி எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, டிஎஸ்பிக்கள் சரவணன், தங்கவேல், முரளி, கிருத்திகா, சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago