‘நோயாளி உயிருடன் இருந்தால் என்ன ? செத்தால் என்ன ?,’ என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர், செவிலியரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளையான்குடி அருகே வடக்கு கீரனூரைச் சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக் (24). இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருந்தபோது கார்த்திக்குக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த நோயாளியின் உறவினர்கள் இதுகுறித்து அப்போது மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலராக இருந்த மீனாவிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய மருத்துவ அலுவலர் மீனா சம்பந்தப்பட்ட செவிலியரின் மொபைலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், நோயாளி கார்த்திக்கை ஏன் தனியார் மருத்துவமனைக்கு நீங்கள் பரிந்துரை செய்தீர்கள். நாம் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.
நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? நோயாளியின் நல்லது, கெட்டது பற்றியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது. இவ்வாறு பேசியுள்ளார்.
தற்போது மருத்துவர் செவிலியருடன் பேசிய ஒலிப்பதிவு சமூக வலை தளங் களில் வைரலாகி வருகிறது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியை தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தது, நோயாளி குறித்து மருத்துவ அதிகாரியின் அலட்சியமான பேச்சு போன்றவற்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இச்சம்பவம் 2 வாரங்களுக்கு முன்பு நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது மீனா நிலைய மருத்துவ அலு வலராக இல்லை. வேறு பணிக்குச் சென்றுவிட்டார். இதுகுறித்து புகார் வந்தால் விசாரிக்கப்படும்,’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago