வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளளர்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது: அறுவடை ஆய்வறிக்கை தயார் செய்த 3 மாதங்களுக்குள் பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், 6 மாதங்கள் கடந்த நிலையிலும் கடந்த 2020-21-ம் ஆண்டு சம்பா பருவத்துக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு குறித்த எந்த அறிவிப்பையும் காப்பீடு நிறுவனம் வெளியிடவில்லை.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பா சாகுபடி பணி தொடங்குவதற்கு முன்னதாகவே முழு இழப்பீட்டுத் தொகையை உடன் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2020-ல் குறுவை சாகு படியில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட வேளாண் துறையின் கவனக் குறைவால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அவர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் தொகையை தனியார் காப்பீடு நிறுவனத்தினர் ஊழல் முறைகேடு செய்து பயன் பெற்று வருகின்றனர். இதை தடுக்க குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவதைபோல, தமிழகத்திலும் வேளாண் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago