தமிழகத்தில் பனை பாதுகாப்பு சட்டம் தேவை : பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதப் பனை ஓலைகள் பயன்படுத் தப்பட்டன. நமது முன்னோர் பல இலக்கியங்களை பனை ஓலையில் எழுதி நமக்கு அளித்துள்ளனர்.

பனை ஒரு மரமல்ல. அது நம்மவர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமாகும். பனை மரங்களையும், அது சார்ந்த தொழிலையும் நம்பியே தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதில் பனை முக்கியப் பங்காற்றி வருகிறது. பல நூற்றாண்டு காலமாக நமது முன்னோர்கள் நட்டு வளர்த்துப் பயன்படுத்திய பனை மரங்களை விறகுக்காக வெட்டுவதும், அதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் வற்றுவதும் பொறுத்துக்கொள்ள முடியாததாகும். இயற்கை தந்த வளத்தை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களின் பகைவர்களே.

கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பனைத் தொழி லாளர்க ளுக்கு தொழில் ரீதியான கடன்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க, தொழில் செய்யும் இடங்களிலிருந்து போக்கு வரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக் கைகள் வலுத்துள்ளன.

பனை மரங்களை செங்கல் சூளைகளுக்காக வெட்டி அழிக்கும் வேலையை சிலர் செய்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமது மக்களுக்கும், அரசுக்கும் உண்டு.

நாகை, திருவாரூர் மாவட் டங்களில் தற்போது பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த, அரசு உரிய சட்டத்தை இயற்ற முன்வர வேண்டும் என பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE