அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை மலை கிராமத்துக்கான சாலை பணி குறித்த புதிய ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் உத்தர விட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டத்துக்கு உட்பட்ட குருமலை மற்றும் அதன் அருகில் உள்ள வெல்லக்கல், நச்சுமேடு உள்ளிட்ட குக்கிராமங்களில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக சுமார் இரண்டரை கி.மீ தொலைவுக்கு மலைப்பாதையில் சாலை அமைக்க ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓரடுக்கு ஜல்லி சாலை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் இரண் டாம் கட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
முறையான சாலை இல்லாத தால் கர்ப்பிணிகள், வயதான வர்களை சிகிச்சைக்காக டோலியில் கட்டி தூக்கி வரவேண்டிய நிலை இருந்தது. இந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கடந்த 3-ம் தேதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மலைப் பாதையில் ஒரு பகுதி செங்குத்தாக இருப்பதால் சாலை பணிக்காக கனரக வாகனங்கள் செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மாற்று ஏற்பாடுகளை செய்து சாலை பணியை தொடர ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் குருமலை மலை கிராமத்துக்கான சாலை பணி தொடர்பாக நேற்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது, வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமரன், செயற்பொறி யாளர் செந்தில்குமார் மற்றும் அணைக்கட்டு வட்டார பொறியாளர்கள் கவிதா, வசந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் மலைப்பாதையில் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதி செங்குத்தாக இருப்பதால் சாலை பணி கிடப்பில் உள்ளது. இதற்கு, மாற்றாக சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு செய்யப் பட்டது. ஆனால், புதிய திட்டத்துக்கு வனத்துறை அனுமதி வாங்குவது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களால் சாலை பணி தாமதமாகும். எனவே, ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் செங்குத்தான பகுதியில் மட்டும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொண்டை ஊசி வளைவு அமைப்பது குறித்து விரிவான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தலைமை பொறியாளர் உத்தர விட்டுள்ளார். இந்த ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் முடிந்துவிடும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாதத்தில் நிலுவையில் உள்ள சாலை பணி தொடங்கப்படும்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago