மார்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டம்நடந்தது.
தமிழக அனைத்து விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டன உரையாற்றினர். பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் தலைமை வகித்தார். தருமபுரி மண்டல தலைவர் சின்னசாமி, மலைவாழ் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஏற்காடு ராமர், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாநகர தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக அண்டை மாநிலங்களை தூண்டிவிடுகிறது. குறிப்பாக கர்நாடகா அரசு சட்ட விரோதமாக மேகேதாட்டு அணை கட்டு வதற்கு முயற்சிக்கிறது. தென் பெண்ணையில் இணையும் மார்கண்டேய நதியில் படுக்கை அணை என்கிற பெயரில் 50 மீட்டர் உயரத்தில் வானுயர்ந்த தடுப்பணையை சட்டவிரோதமாக கட்டியிருக்கிறது.
இது பேரழிவை ஏற்படுத்தும். மழை வெள்ள காலங்களில் இந்த அணையால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக விவசாயிகளும் பேரழிவை சந்திப்பார்கள்.
இந்த அணையை அகற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். தென்னிந்தியா ஒன்றுபடுவதை சீர்குலைக்க வேண்டும் என்கிற மறைமுக நோக்கோடு மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களில் நீர் ஆதார பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது. பாஜக தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட எடுத்த முயற்சிகள் தோல்வி யடைந்ததால்,திட்டமிட்டு தமிழகத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கோடு நீராதார பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது. இதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றம் ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பி தானே வழக்குப்பதிவு செய்து தமிழகத்திற்கு எதிரான நீராதார பிரச்சினைகள் குறித்து நீதி வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில், சேலம் மாவட்ட செயலாளர் ஆத்தூர் பெருமாள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago