கரோனா ஊரடங்கின்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 950 லிட்டர் மதுபானங்களை போலீஸார் அழித்தனர்.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. கரோனா ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. அப்போது, கர்நாடக மாநிலத்தில் மதுபானக் கடைகள் செயல்பட்டன. இந்நிலையில் பெங்களூரு, ஆணைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக, மதுவிலக்கு பிரிவு சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கிருஷ்ணகிரி எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாநில எல்லை சோதனைச் சாவடிகள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையில் 5 மாதங்களில் 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 4754 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீஸார் 146 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3918 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மற்றும் வெளிமாநில மதுபானங்கள், கிருஷ்ணகிரி மதுவிலக்குப் பிரிவு போலீஸார், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தீ வைத்து அழித்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் குமார் ஆகியோர் கூறும்போது, தற்போது ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுக்கடத்தலை தடுக்க வாகனத்தணிக்கை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். பதிவு செய்யப்பட்ட மதுகடத்தல் வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago