திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் - தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், கால்வாய் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, 2 லட்சத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சிலவற்றை சரியாக மூடப்படாததால் பல வார்டுகளில் மழைநீர் குட்டைப்போல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ரோடு, பாரதிதாசன் நகர், கவுதம்பேட்டை, சிவராஜ்பேட்டை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப்பகுதி, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை என பல பகுதிகளில் சாலைகள் சீரமைக் கப்படாமல் உள்ளன.

திருப்பத்தூர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய் கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், கால்வாய் தூர்வாரப்படாததாலும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் குட்டைப் போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் நகர் தனி தீவுப்போல் உள்ளது.

மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 22,24,25, 27, 28, 29, 32, 33, 36 ஆகிய வார்டுகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. இதற்கிடையே, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையின் பிரதானப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் குப்பைக்கழிவுகள் மலை போல் குவிந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட 28,29 வார்டுகளில் தூய்மைப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சில வார்டுகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. கால்வாய் அமைக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்