எம்ஜிஆர் நகரில் 3 மாதங்களாக தொடரும் குடிநீர் தட்டுப்பாடு : முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் பெருநகராட்சியின் 26 மற்றும் 27-வது வார்டு பகுதியில் எம்ஜிஆர் நகர் மற்றும் சக்கரபாணி தெரு அமைந்துள்ளன. இப்பகுதியில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, திருவீதி பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக, 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என தெரிகிறது. மேலும், `அடிக்கடி குழாய் உடைப்பு, மின்மோட்டார் பழுது மற்றும் ஆழ்துளை கிணற்றில் நீர்சுரப்பு இல்லை' எனக்கூறி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் காலி குடங்களை சுமந்து பல்வேறு இடங்களுக்கு சென்று குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, ``குடிநீர் விநியோகம் தடைபடுவது குறித்து பம்ப் ஆபரேட்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவதில்லை. மேலும், திருவீதிப் பள்ளம் ஆழ்துளை கிணற்றில் நீர் சுரப்பு இல்லை என ஊழியர்கள் கூறும் நிலையில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை.

மேலும், நகராட்சியின் பிற பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டால் உடனடியாக லாரியில் விநியோகம் செய்யும் நகராட்சி நிர்வாகம், இப்பகுதியை கண்டுகொள்வதில்லை. இதனால், மழைக்காலத்திலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோம்'' என்றனர்.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, ``எம்ஜிஆர் நகர் மற்றும் சக்கரபாணி தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்