கிருஷ்ணகிரி அருகே - பண இரட்டிப்பு விவகாரத்தில் வியாபாரி உட்பட 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே பணம் இரட்டிப்பு விவகாரத்தில் காய்கறி மொத்த வியாபாரி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கவரை தெருவைச் சேர்ந்தவர் நாசர் (38). மொத்த காய்கறி வியாபாரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வார்.

இவரிடம் சுமை தூக்கும் தொழிலாளியாக கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் ராஜேஷ் (26), முத்தையா நகர் மோகன்ராஜ் (27), காசாளராக மல்லப்பாளையம் முத்துக்குமரன் (32), கீழபரட்டை கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் காமராஜ் (எ) நரி (25) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜாகடை காவல் நிலையத்துக்கு வந்த நாசர் தனது பணியாளர்களிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறிய 2 பேர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். மேலும், போலீஸாரிடம் நாசர் கூறியதாவது:

தங்களுக்கு தெரிந்தவர்கள் இரட்டிப்பாக பணம் கொடுப்பதாக எனது பணியாளர்கள் கூறினர். அதை நம்பிய நான் ரூ.80 லட்சத்தை எனது ஊழியர்கள் முத்துக்குமரன், ராஜேஷ் உள்ளிட்டவர்களிடம் கொடுத்தேன்.பணத்துடன் ராஜேஷ், முத்துக்குமரன், மோகன்ராஜ், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2-ம் தேதி ஓசூர் வந்தனர்.

பின்னர் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறிய காஞ்சிபுரம் அபுபக்கர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த பண்டரி ஆகியோரை தொடர்பு கொண்ட ராஜேஷ் உள்ளிட்டோர் அன்று மாலை கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் அவர்கள் அனைவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது, நான் கொடுத்த பணத்தில் ரூ.10 லட்சத்தை வைத்துக் கொண்டு ரூ.70 லட்சத்தை ராஜேஷ் உள்ளிட்டோர் அபுபக்கர், பண்டரி ஆகியோரிடம் கொடுத்து ரூ.1 கோடி தருமாறு கேட்டுள்ளனர்.பணத்தை பெற்றுக் கொண்ட அபுபக்கர், பண்டரி ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி காரில் தங்களை பின் தொடர்ந்து வருங்கள் எனக்கூறி குப்பம் சாலையில் சென்றனர். எனது பணியாளர்கள் சரக்கு வாகனத்தில் காரை பின் தொடர்ந்து சென்றபோது காரில் அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாசர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீஸார் விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் நாசர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும், தப்பிய அபுபக்கர் மற்றும் பண்டரியை தேடி வருகின்றனர்.

தப்பிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினால் மட்டுமே பணம் இரட்டிப்பு மோசடி நடந்ததா? எவ்வளவு பணத்தை அவர்கள் பெற்றார்கள் என்று விவரங்கள் தெரியும் என போலீஸார் தெரிவித்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்