தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று (ஜூலை 5) முதல் மீண்டும் செயல்பட உள்ளதால், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்பாக ஆட்சியர் நேற்று ஆய்வு செய்து, வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர் காமராஜ் காய்கறி மார்க்கெட், தற்காலிகமாக புதுக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோயில் அருகே செயல்பட்டு வந்தது.
கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக இந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கியது.
இந்நிலையில், ஊரடங்கில் தமிழக அரசு வழங்கிய சில தளர்வுகளின் அடிப்படையில், தஞ்சாவூர் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று (ஜூலை 5) முதல் வழக்கமான இடத்தில் செயல்பட உள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதுக்கோட்டை சாலையில் தற்காலிக மார்க்கெட் செயல்பட உள்ள இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனா தொற்று பரவாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோல, பொதுமக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர், தென்கீழ் அலங்கத்தில் செயல்படும் தற்காலிக மீன் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு முகக்கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பர்மா பஜார் பகுதியில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ள பகுதியை ஆய்வு செய்து, அங்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்யவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago