தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள 73 கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தஞ்சாவூர் வட்டாரத்தில் தற்போது குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், அரிசி உற்பத்தித் திறனை பெருக்கி உழவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக முதல்வரால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற விதைநெல் 50 சதவீத மானியத்துடனும், ஏக்கருக்கு ரூ.2,185 மதிப்புள்ள 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் மற்றும் ரூ.1,400 மதிப்புள்ள 20 கிலோ தக்கைப்பூண்டு, பசுந்தாள் உர விதைகள் ஆகியவை முழு மானியத்துடனும் வழங்கப்பட உள்ளன.
விதைநெல் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாகவும், ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் வழங்கப்பட உள்ளன. தஞ்சாவூர் வட்டாரத்தில் 73 கிராமங்களில் 8,400 ஏக்கரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நடப்பு குறுவை பட்டத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நேரிடையாக வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தஞ்சாவூர், வல்லம், சூரக்கோட்டை, மானாங்கோரை ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறுவை தொகுப்பு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு நகல், தற்போது குறுவை சாகுபடி செய்ததற்கான கிராம நிர்வாக அலுவலரின் சிட்டா, அடங்கல் சான்று மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago