சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அபாய் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அபாய் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதிக்கு நகராட்சி சார்பில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. வாரத்துக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த காவிரி குடிநீர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டது.
குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கரோனா பரவலை காரணம் காட்டி கடந்த 2 மாதங்களாக குடிநீர் குழாய் இணைப்பு சரி செய்யப்படவில்லை.
இதுவரை குடிநீர் விநியோகமும் செய்யவில்லை. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் நகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் குட்டைப்போல் தேங்கியுள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் இணைப்பு சரிசெய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும். சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர். விரைவாக குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரிகளில் தண்ணீர் வழங்கப்படும் என்றும், கழிவுநீரை வெளியேற்றவும், கால்வாய்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago