வேலூர் மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி திட்டத்தில் 2021-22 ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதால் இன்று (5-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி வரை பள்ளிக் கல்வி துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களிலும் இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளியாக இருக்கும்குழந்தை, மூன்றாம் பாலினத்த வர்கள், எச்ஐவியால் பாதிக்கப் பட்ட குழந்தை, துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் தகுதியானவர்கள்.
ஆன்லைன் விண்ணப்பத்துக் காக இருப்பிட சான்றுக்கான குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, ஆண்டு வருமானச் சான்று, பிறப்புச் சான்று, குழந்தையின் சமீபத்திய இரண்டு புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும். குழந்தையின் வயது சான்றுக்கான ஆவணத்தையும் எடுத்துவர வேண்டும். எல்.கே.ஜி பிரிவு சேர்க்கைக்கு 3 வயதும், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago