திருப்பூர் மாவட்டத்தில் நாளைமுதல் (ஜூலை 5) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிக்கு திரும்புவதாலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஜூலை 5) காலை 6 மணி முதல் பொதுப் போக்குவரத்தான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருப்பூர் 1, திருப்பூர் 2, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம், பழநி 1, பழநி 2 ஆகிய 8 கிளைகளில் இருந்து 330 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
330 பேருந்துகள்
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கூறும்போது, "கரோனா தொற்று 2-ம் அலை காரணமாக, தமிழகத்தில் மே 10-ம் தேதி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மே 23, 24 தேதிகளில் மட்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது. இந்நிலையில், 50 நாட்களுக்கு பிறகு நாளை (ஜூலை 5) காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் நகரப் பேருந்துகள் 150, பிற மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகள் 180 என 330 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்துக்கு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை அழைத்துவர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன" என்றனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் - காங்கயம் சாலையிலுள்ள பணிமனை 1, 2-ல் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகளையும் மேற்கொண்டனர். பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், சமூக இடைவெளியுடன் பேருந்து போக்குவரத்தை மக்கள் பயன்படுத்ததினால், கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படுமென, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் தொழில்துறையினர் சிலர் கூறும்போது, "திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் பலரும், திருப்பூர் திரும்ப நினைப்பார்கள். தென் மாவட்டங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வருவதற்காக பிற மாவட்டங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கினால், பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியுடன் பயணம் செய்வார்கள். இதை கவனத்தில்கொண்டு பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago