திருப்பூர் மாவட்டத்துக்கு உலகத் தரம் வாய்ந்த அளவில் 11.2 ஏக்கர் பரப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.
திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள விளையாட்டுத் திடல், முருகம்பாளையம் பகுதியிலுள்ள கழிவுநீர் பொது சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டோம். சாய ஆலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. 2010-ம் ஆண்டு சாய ஆலைகளை மூட வேண்டுமென கோரிக்கை எழுந்தபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி முயற்சியால், தமிழக அரசு சார்பில் ரூ.200 கோடி மற்றும் மத்திய அரசு சார்பில் ரூ.100 கோடி திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாய ஆலைகள் காப்பாற்றப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பெரும் பிரச்சினையாக இருக்கும் நொய்யல் ஆறு, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் ஆகியவற்றை புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதுமட்டுமின்றி தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்டத்துக்கென உலகத் தரம் வாய்ந்த அளவில் 11.2 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.9 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் தளம் அமைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஹாக்கி, வாலிபால், கால்பந்து என அனைத்து விளையாட்டுகளுக்கென மைதானங்கள் உருவாக்கப்பட உள்ளன. விரைவில், அதற்கான தொடக்க விழாவை முதல்வர் தொடங்கி வைப்பார். அடுத்த 45 நாட்களுக்குள் விளையாட்டு மைதானம் அமைக்க தேவையான பணிகள் நடைபெறும். சாயக் கழிவுகள் இனி ஆறுகளில் கலக்காத வண்ணம், புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.
திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago