கரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், ஏப்ரல் 20-ம்தேதி முதல் மூடப்பட்டன. தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும், பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, நாளை (ஜூலை 5) முதல் பொது போக்குவரத்துக்கும் அனுமதியளித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
அரசு பூங்காக்களையும் திறக்க அரசு அனுமதித்துள்ளதால், 75 நாட்களுக்குப் பின்னர் உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலைப் பூங்கா, குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் வரும் 5-ம்தேதி (நாளை) திறக்கப்படும் என தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தெரிவித்தார்.
சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியிடாததால், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட மாட்டாது என சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், சூட்டிங் மட்டம், குன்னூர் டால்பின்ஸ் நோஸ், லேம்ஸ்ராக், கூடலூர் ஊசி மலை ஆகியவை மூடப்பட்டிருக்கும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago