பாடி -திருநின்றவூர் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் : நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

பாடி - திருநின்றவூர் 4 வழிச் சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தொடங்கி உள்ளது.

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, தரம்உயர்த்தி தேசிய நெடுஞ்சாலையாக அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, பாடி முதல் திருப்பதி வரை, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது.

இதில், திருத்தணியை அடுத்ததமிழக எல்லையான அலமேலுமங்காபுரத்தில் இருந்து திருநின்றவூரை அடுத்த பாக்கம் வரைமுதற்கட்டமாக 68 கிமீ தூரம்வரையான சாலை விரிவாக்கப்பணியை, தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது.

ஆனால், 2-ம் கட்டமாக, பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை. சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த முடியாததால், தேசிய நெடுஞ்சாலைத் துறை இச்சாலையை விரிவாக்கம் செய்யமறுத்து விட்டது.

இதையடுத்து, 2013-ம் ஆண்டுஅப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை - திருப்பதி சாலை ரூ.168 கோடி செலவில் ஆறுவழிச் சாலையாக மாற்றப்படும் என அறிவித்தார். இதையடுத்து, 2014-ம் ஆண்டு, அந்தச் சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.98 கோடி மதிப்பீட்டில், நான்கு வழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், சாலையின் இருபுறமும் உள்ள ஏராளமான கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களை அகற்ற, பொதுமக்களும், வணிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், சில குறுக்கீடுகளும் இருந்ததால், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதையடுத்து, மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச்சில் அம்பத்துார், ஆவடி, திருவள்ளூர் ஆகிய மூன்று தாலுக்கா வட்டாட்சியர்கள் தலைமையில், சாலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகள் நடந்தன. ஆனால், அப்பணியும் பாதியிலேயே நின்று போனது.

இந்நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, சென்னை - திருத்தணி -ரேணிகுண்டா சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், பாடி முதல் திருநின்றவூர் வரை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளது. இதன்படி, சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர், ஆவடி,திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள்...

இதுதொடர்பாக, ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், பட்டாபிராம் இந்துக் கல்லூரி அருகில் உள்ள மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி (நில எடுப்பு) அலுவலகத்தில் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், சாலைவிரிவாக்கம் செய்யும் பணிகள்தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்