நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை நேற்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். கர்நாடகா அணை கட்டும் விவகாரம் குறித்து மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், ஓரிரு தினங்களில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். அதில், நல்ல தீர்வு கிடைக்கும்.
உயர் நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களில் நிரந்தரமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வது குறித்து தற்போது நோட்டீஸ் கொடுத்தால் அதை வைத்து இடைக்கால தடை வாங்கியே 3 ஆண்டுகளை ஓட்டி விடுவார்கள். எனவே, உரிய வழிகாட்டு நெறிமுறைகள்படி அரசு வழக்கறிஞர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
புதுக்கோட்டை நகராட்சியை சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்திய பிறகு, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், தொகுதி மறுவரையறை செய்யும்போது, மீண்டும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உருவாக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, எம்எல்ஏ வை.முத்துராஜா, ஆட்சியர் கவிதா ராமு, அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் இளங்கோவன், நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago