நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நாகை எம்.பி எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் 2-ம் அலை தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோரைக் கவனத்தில்கொண்டும், மேலும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடந்த மே 21-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில், பிஎஸ்ஏ தொழில்நுட்பத்தில் நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் 500 எல்பிஎம் கொள்திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தலா 1,000 எல்பிஎம் கொள்திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த ஆலைகள் அமைந்தால் தேவையான அளவு ஆக்சிஜனை மருத்துவமனையிலேயே உற்பத்தி செய்துகொள்வதுடன், கரோனா வைரஸ் 3-ம் அலை தாக்குதல் வந்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago