பனை மரங்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் தெரிவித்துள்ளது: தமிழ்நாட்டில் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடைபெற்று வருகிறது.
பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த லாரிகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வெட்டப்பட்டபனை மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மறித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தாலும், பனைமரவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5.5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், அதில் இன்று 2.5 கோடி பனை மரங்கள்தான் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் அடையாளச் சின்னமான பனை மரம், வேர் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும். பனைமரங்களை தொழிற்சாலைகளுக்காக அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் இருக்கிறது.
எனவே, பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும், அதில் சிறைத் தண்டனை பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago