காட்பாடி ரயில்வே மேம்பாலம் பலப்படுத்தும் பணிக்காக வடுகன்தாங்கல் ரயில்வே மேம்பால பணியை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
காட்பாடி ரயில்வே மேம்பாலம் பலமிழந்துள்ளதால் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பணி பாதி நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. இதற்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. தமிழக- ஆந்திர எல்லையின் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்ய தேவையான முன் நடவடிக்கை எடுத்த பிறகே பணிகள் தொடங்க வேண்டியுள்ளது.
இதற்கிடையில், ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமார வேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் மற்றும் சித்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும்போது போக்குவரத்து மாற்றம் செய்ய ஏதுவாக வடுகன்தாங்கல் ரயில்வே மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தற்போது, இந்தபாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதால் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிலுவை பணிகளை முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகே செப்டம்பர் 1-ம் தேதி முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் 20 நாட்கள் கழித்து கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்கப்படும்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago